Chennai News Updates: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin about education

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • May 23, 2025 07:02 IST

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் செல்கிறார். தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதிகளை விடுவிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்த திட்டம்



  • May 22, 2025 21:43 IST

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் நேரில் ஆய்வு

    சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் செந்தில் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இங்கு மின் தடை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.



  • Advertisment
  • May 22, 2025 20:43 IST

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட நேரமாக மின் தடை

    சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் 7 மாடிக் கட்டடத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மருத்துவமனையின் அருகே கட்டுமான பணியின் போது மின்சார கம்பி துண்டிக்கப்பட்டதால் மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 



  • May 22, 2025 20:18 IST

    விவசாயிகள் குறித்து அமைச்சர் சர்ச்சை பேச்சு

    விவசாயிகள் குறித்து வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, "விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் கொடுத்தால், ஒருவருக்கு ஒருவர் சுட்டுக்கொள்வார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.



  • Advertisment
    Advertisements
  • May 22, 2025 19:44 IST

    நிதி ஆயோக் கூட்டத்திற்கு அழைப்பின் பேரில் தான் ஸ்டாலின் செல்கிறார் - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    நிதி ஆயோக் கூட்டத்திற்கு அழைப்பின் பேரில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், "மூன்று கார்கள் மாறி மாறி அமித்ஷாவை பார்க்கச் சென்றவர் தான் எடப்பாடி பழனிசாமி" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



  • May 22, 2025 19:38 IST

    ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

    தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை எனவும், திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். மேலும், அரசு, அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அனைத்தும் திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • May 22, 2025 18:56 IST

    மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

    கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுவதால் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாக கேரளாவில் 95 பேரும் தமிழகத்தில் 66 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



  • May 22, 2025 18:52 IST

    இறுதி கட்டத்தை எட்டிய மின்சார பேருந்து பணி

    சென்னையில் முதல் கட்டமாக 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பேருந்தை இயக்க முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.



  • May 22, 2025 17:59 IST

    "தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்?" -சென்னை உயர்நீதிமன்றம்

    ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்? நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 



  • May 22, 2025 17:15 IST

    "தமிழகத்திற்கு 40 டிஎம்சி நீரை விடுவிக்க கோரிக்கை"

    தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாத பங்காக 40 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும். டெல்லியில் நடைபெற்ற 40வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி கர்நாடகம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • May 22, 2025 17:10 IST

    என்.ஆர்.இளங்கோ எம்.பி., திமுக சட்டத்துறை செயலாளர்

    அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கின்றார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்கள். எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.



  • May 22, 2025 16:23 IST

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவு

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்திற்கு நீர்திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு. “ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும்” என்று காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • May 22, 2025 16:08 IST

    கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி

    தக் லைஃப் திரைப்படம், திரைக்கு வந்த 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என்ற கமல்ஹாசனின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் வரவேற்பு. அனைத்து தயாரிப்பாளர்களும் இதனை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 



  • May 22, 2025 16:04 IST

    ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்து விட உத்தரவு. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டத்தில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 



  • May 22, 2025 15:50 IST

    நடிகர் சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது

    மும்பை: பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட இஷா சாம்ரா என்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • May 22, 2025 15:33 IST

    நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை-நெறிமுறை வெளியீடு

    நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக நெறிமுறைகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். “தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணை, அனைத்து விதமான கட்டணத்தையும் வெளியிட வேண்டும்; தவறிழைக்கும் கல்லூரிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 



  • May 22, 2025 15:02 IST

    அ.தி.மு.கவை விமர்சித்தால் நடவடிக்கை -  நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை?

    பா.ஜ.க-வில் இருந்துகொண்டு அ.தி.மு.க-வை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

     



  • May 22, 2025 15:00 IST

    ராமதாஸ் -  அன்புமணி ஒன்றிணைய வேண்டும்: நயினார் நாகேந்திரன் பேட்டி 

    பா.ம.க தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார். நெல்லையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லையப்பர் கோயிலில் தற்போது யானை இல்லை. கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக உ.பி. மாநிலத்தில் இரு யானை குட்டிகள் உள்ளன. மத்திய, மாநில அரசு விதிகளுக்கு உட்பட்டு யானை வாங்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையில் பின்னணியில் பாஜக இல்லை. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் பாஜக ஆட்சி அமையும்போது கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



  • May 22, 2025 14:59 IST

    மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது -  ராஜஸ்தானில் மோடி பேச்சு

    பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்ததாகவும், சிந்தூர் துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கிறது என்பதை உலகமும் நாட்டின் எதிரிகளும் இப்போது பார்த்திருப்பதாகவும், தனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது என்றும் கூறியுள்ளார்.

    இந்தியாவின் பதில் "நீதியின் புதிய வடிவம்" என்றும், பாகிஸ்தானுடன் இப்போது எந்த வர்த்தகமோ அல்லது பேச்சுவார்த்தையோ இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக, சமீபத்திய முன்னேற்றங்கள் மூன்று விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளன: ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பொருத்தமான பதில் இருக்கும், அணுகுண்டு அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படாது, பாகிஸ்தானின் "அரசு மற்றும் அரசு சாராத நடிகர்களை" இந்தியா ஒன்றாகக் கருதும் என்றும்ம் பிரதமர் மோடி கூறியுள்ளார். 



  • May 22, 2025 14:58 IST

    உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

     

    வங்கக் கடலில் வரும் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



  • May 22, 2025 14:36 IST

    அமலாக்கத்துறையை மத்திய அரசு இயக்குகிறது என்று சொல்வதே தவறு - தமிழிசை

    டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  

    இது தொடர்பாக அவர் அந்தப் பதிவில், "வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் அதை மதிக்கிறோம். ஆனால்  இதை சிலர் அரசியல் ஆக்கிக் கொண்டிருப்பதனால்.. சில சிந்தனைகளை பதிவிடுவது தவறில்லை 

    1. முதலில் அமலாக்கத்துறை.. மத்திய அரசு இயக்குகிறது என்று சொல்வதே தவறு.. அது தனிப்பட்ட அமைப்பு.. பாஜக ஆளுகின்ற அஸ்ஸாம் ஹிமாச்சல பிரதேஷ் மகாராஷ்டிரா போன்ற இடங்களில் கூட ED ரெய்டுகள் நடந்திருக்கின்றன

    டாஸ்மாக்கை பொருத்தமட்டில். இந்த வழக்கின் அடிப்படையே தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 FIR-கள் தான். சென்னை உயர்நீதி மன்றத்தில். தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னபோது.. உயர்நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்து விசாரணை தொடரலாம் என்று சொன்னதன் பேரிலேயே.. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது 

    ஏற்கனவே டாஸ்மாக்கில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.. தவறான பண பரிவர்த்தனையை தான் அமலாக்கத்துறை விசாரணை செய்து கொண்டு இருந்தது ..ஆக ஊழல் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது இப்பொழுது வந்திருப்பது இடைக்கால தடையை தவிர இதற்கு மேலும் விசாரணை நடைபெறும். இந்த கருத்துப்பதிவின் நோக்கம் நோக்கம். அரசியல் அல்ல. மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் சுரண்டப்படக் கூடாது என்பதுதான்   

    இதை காழ்ப்புணர்ச்சி என்று பார்ப்பதை விட மக்களின் பணத்திற்கு ஆளும் அரசு பதில் சொல்லி ஆக வேண்டும் என்ற அடிப்படை தான் இதில் குறிப்பிடப்பட வேண்டும் எது எப்படி இருந்தாலும் இன்று நாம் தமிழக மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணம் யார் சுருட்டினாலும் அதற்கு மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்...
    இதற்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக அரசு சர்க்காரியா கமிஷனினால் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்பவர்கள் என்ற சர்டிபிகேட்டை பெற்றவர்கள் என்பதை நாம் இங்கே நினைவு கூறுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 



  • May 22, 2025 14:20 IST

    பா.ஜ.க அரசுக்கு சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி

    தி.மு.க மீது பழிசுமத்தும் வகையில் பேசும் பாஜகவினருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு உயர்ந்து வருவதை பொறுக்காமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். அதற்கு சம்மட்டி அடி தரும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எங்களது அனைத்து முடிவுகள் நியாயமானது என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு அங்கீகாரம். அமலாக்கத் துறையின் அக்கப் போர்களுக்கு இந்த தீர்ப்பு முடிவு கட்டியுள்ளது. தீர்ப்பை திமுக வரவேற்கிறது. இனிமேலாவது ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையால் தலையிட முடியாது.” என்று அவர்  தெரிவித்துள்ளார். 



  • May 22, 2025 14:11 IST

    யூ-டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு போலீஸ் காவல்

    பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ-டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை அதிகாரியிடம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. மே 16 அன்று ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 



  • May 22, 2025 13:47 IST

    இ.டி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை - எல்.முருகன்

    டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்; அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



  • May 22, 2025 13:27 IST

    இ.டி நடவடிக்கையில் என்ன தவறு?  - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி

    டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து தெரிவித்துள்ளார். "அமலாக்கத்துறை நடவடிக்கையில் என்ன தவறு? மாநில அரசும் விசாரணை நடத்தலாம், அமாக்கத்துறையும் விசாரணை நடத்தலாம். சட்டவிரோத பணம் பரிமாற்றம் வாரும் போது தான் அமலாக்கத்துறை உள்ளே வரும்." என்று அவர் கூறியிருக்கிறார்.   



  • May 22, 2025 12:23 IST

    தமிழகத்தில் 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறப்பு

    நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்துவைத்தார். தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.



  • May 22, 2025 12:07 IST

    டாஸ்மாக் வழக்கில் இ.டி. விசாரணைக்கு தடை - உச்சநீதிமன்றம்

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனைத்து வரம்புகளையும் மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. தனிநபர் வழக்கு என்பது வேறு, ஆனால், அரசு நிறுவனத்திற்கு எதிராக எப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அமலாக்கத் துறையினர் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையும் விதித்தனர்.



  • May 22, 2025 12:03 IST

    ஆம் ஆத்மி கட்சி: தமிழக ஒருங்கிணைப்பாளர் நியமனம்

    ஆம் ஆத்மி கட்சி புதிய மாநில நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கு முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சின் மூத்த தலைவர் திலீப் பாண்டே கட்சியின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.



  • May 22, 2025 11:44 IST

    ஜனவரி 9-ம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு – பிரேமலதா விஜயகாந்த்

    அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் தே.மு.தி.க மாநாடு நடைபெறும். அப்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்



  • May 22, 2025 11:08 IST

    ரூ.80 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு; விரைவில் திறப்பு விழா

    ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம், முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. 1400 பேர் அமரும் வகையில் ஏசி கூட்ட அரங்கு, உணவுக்கூடம், ஒலி ஒளி காட்சிக்கூடம், குறள் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன



  • May 22, 2025 10:58 IST

    ரயிலில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

    ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அதிவிரைவு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணத்தை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 22, 2025 10:35 IST

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது

    வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி, தெற்கு கொங்கன் கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.



  • May 22, 2025 09:42 IST

    தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கோவை - வால்பாறை, நீலகிரி- கூடலூர், கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் 20 செ.மீ வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.



  • May 22, 2025 09:27 IST

    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் (நாளை மாலை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளா - தமிழ்நாடு பகுதிகளில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது



  • May 22, 2025 09:05 IST

    முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு -உத்தரவு

    தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட செயல்முறைகளில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறை 2024-25 கல்வியாண்டில் ஆக.1-ந்தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்தும் விவரங்கள் பெற்று தொகுக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில், உபரி என கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்ப தகுந்த காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் அனுப்ப முதன்மை கல்வி அலுவலரால் வருகிற 26-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



  • May 22, 2025 08:32 IST

    சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

    சென்னையில் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் உட்பட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • May 22, 2025 08:30 IST

    கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யா பயணம்

    திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் அறிவிக்கப்பட்டனர்.



  • May 22, 2025 07:26 IST

    தமிழகம், புதுச்சேரியில் 27-ம் தேதி வரை மிதமான மழை

    தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மே 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 22, 2025 07:22 IST

    ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் - ரூ.1,000 அபராதம்

    எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், அதை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • May 22, 2025 07:19 IST

    கொரோனா தொற்று பரவல்: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

    தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 22, 2025 07:16 IST

    அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட், சூலூர்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குளித்துறை ஆகிய 9 ரயில்கள் இன்று திறக்கப்படுகின்றன. டிஜிட்டல் அடையாள போா்டுகள், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி, சுமை பரிசோதனை இயந்திரங்கள், முக்கிய பிரமுகா்கள் ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், அழகிய மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இலவச மற்றும் கட்டண வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சாலை வசதி, வாகன நிறுத்தகம், புதிதாக பயணச் சீட்டு வழங்கும் அறைகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், சுகாதார வளாகம் சீரமைக்கப்படுகிறது. பயணிகள் இருக்கை வசதி, தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நீட்டிக்கப்பட்ட மேற்கூரை வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது.



  • May 22, 2025 07:13 IST

    கலைஞர் உதவித்தொகை-29ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

    கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள், 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். 



Chennai Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: