/indian-express-tamil/media/media_files/2025/05/05/yN0DDyK3wdyc0kyEj7qN.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.90 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.49 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 07, 2025 21:57 IST
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக ஹிமாச்சல் பிரதேசம், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jun 07, 2025 21:42 IST
ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு
ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முன்னதாக, ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
-
Jun 07, 2025 20:36 IST
ராமதாஸ் உடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு
சென்னையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸை குருமூர்த்தி, சைதை துரை சாமி ஆகியோர் சந்தித்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று பேசியது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
-
Jun 07, 2025 20:13 IST
வாக்குச் சாவடிகளின் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட ராகுல் காந்தி வலியுறுத்தல்
மராட்டிய தேர்தல் குறித்து மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், அனைத்து வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணிக்கு பிறகான சி.சி.டி.வி காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 07, 2025 19:26 IST
தங்க நகைக் கடனுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஆர்.பி.ஐ
தங்க நகைக் கடனுக்கு புதிய விதிமுறைகளை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி நகைக்கான ரசீது இல்லாமல் கடன் பெற முடியும் எனவும், தங்க நகையின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெளியிடப்பட்ட விதிமுறைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவற்றை மாற்றி புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
-
Jun 07, 2025 18:32 IST
பெங்களூரில் கொண்டாட்டம் ஆர்.சி.பி அணியின் தனிப்பட்ட நிகழ்வு: பி.சி.சி.ஐ செயலாளர்
பெங்களூரில் நடைபெற்ற கொண்டாட்டம் ஆர்.சி.பி அணியின் தனிப்பட்ட நிகழ்வு. இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு பொறுப்பு வகிக்கும் அமைப்பாக, இதுபோன்ற நிகழ்வு இனி நடக்காமல் இருக்க, பிசிசிஐ உறுதி செய்யும்.ஒரு கட்டத்தில் பிசிசிஐ ஏதாவது செய்யும் அமைதியாக இருந்துவிட முடியாது என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கூறியுள்ளார்.
-
Jun 07, 2025 17:42 IST
எலான் மஸ்குடன் மோதல்: டெஸ்லா காரை விற்கும் முடிவில் ட்ரம்ப்
எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், சமீபத்தில் வாங்கிய டெஸ்லா காரை விற்பனை செய்ய ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jun 07, 2025 17:37 IST
கடந்த 3 நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல் வெளியீடு
கடந்த 3 நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல் வெளியிட்ட போக்குவரத்துத் துறை! நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் குவிவதால் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முன்பதிவு செய்து பயணம் செய்ய பொதும்க்களுக்கு அறிவுறுத்தல்.
-
Jun 07, 2025 16:50 IST
அமித்ஷா வருகை - ட்ரோன்கள் பறக்க தடை
இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 16:26 IST
அரிசி கடைக்குள் புகுந்த வேனின் பரபரப்பு சிசிடிவி காட்சி
புதுச்சேரி காந்தி வீதியில் திடீரென அரிசி கடைக்குள் புகுந்த வேனின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது. ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வேனை ஓட்ட ஆசைப்பட்ட கிளீனர், ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
-
Jun 07, 2025 15:47 IST
ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த பக்தர்கள்.. 20 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்
வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ. 300 டோக்கன் பெற்றவர்கள் 5 மணி நேரமும் சர்வ தரிசனம் டோக்கன் பெற்றவர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி 3 கி.மீ தூரம் வரை பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
-
Jun 07, 2025 15:33 IST
ஆன்மீக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு - சண்முகம்
மதுரையில் நடக்கவிருப்பது ஆன்மீக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
Jun 07, 2025 15:13 IST
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஜூன் 6 ஆம் தேதி மட்டும் இந்தியாவில் கொரோனாவல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.
-
Jun 07, 2025 14:51 IST
திமுக மாவட்டச் செயலளர்களுக்கு முதல்வர் அறிவுரை
திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள், வாக்காளர்கள் கூறும் குறைகளை கேட்டு, பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும்; திமுக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து ஒவ்வொரு பூத்திலும் 30% வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jun 07, 2025 13:59 IST
எங்கள் அணிக்குதான் இபிஎஸ் வந்திருக்கிறார் - டிடிவி தினகரன்
"அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை; எங்கள் கூட்டணிக்குதான் இபிஎஸ் வந்திருக்கிறார். எங்கள் பங்காளி சண்டையை ஓரம் வைத்துவிட்டு, திமுகவை வீழ்த்திய பிறகு பார்த்துக்கொள்ளலாம் பாமகவில் அப்பா, மகனுக்குள் பிரச்சினை முடிந்து, பழைய பலத்தோடு எங்கள் கூட்டணிக்கு வருவர்; கூட்டணி கட்சி மாத்திரமல்ல, புதிய கட்சிகளும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
Jun 07, 2025 13:54 IST
அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ் விளக்கம்
அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை என்று ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பல் மருத்துவரை சந்திப்பதற்காக மட்டுமே சென்னை வந்துள்ளேன்; வேறு எந்த சந்திப்புக்கும் திட்டமிடவில்லை. தனது பேரன் முகுந்தன் கட்சி பொறுப்பை விட தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். அமித் ஷா வருகையின்போது பாஜக -பாமக கூட்டணியை உறுதி செய்யப்படுமா என்பது பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. கூட்டணியை பற்றி பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை
-
Jun 07, 2025 13:54 IST
CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . உள்ளம் உவகையில் நிறைகிறது… தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் அதன் செயலாளர் அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!
-
Jun 07, 2025 13:53 IST
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக காணொலியில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
-
Jun 07, 2025 13:14 IST
பாமகவில் எந்த பிளவும் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
பாமகவில் எந்த பிளவும் இல்லை என்று சென்னை வந்தடைந்த ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். “கருத்து மோதல் இல்லை. விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன்; அன்புமணியுடன் சந்திப்பு இல்லை. வேறு அரசியல் சார்ந்த சந்திப்புக்கும் வாய்ப்பு இல்லை” எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Jun 07, 2025 12:45 IST
நாடு முழுவதும் புதிதாக 391 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 391 பேர் கொரோனாவால் பாதிப்பு, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு, தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை
-
Jun 07, 2025 12:44 IST
பொறியியல் படிப்பு: 3.02 லட்சம் விண்ணப்பம்
32 நாட்கள் நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
-
Jun 07, 2025 12:22 IST
பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஜூன் 11 முதல் 14ம் தேதிவரை பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவிப்பு.
-
Jun 07, 2025 11:05 IST
ஆலோசனை கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!
-
Jun 07, 2025 11:04 IST
ராமதாஸ் பேட்டி
ஆடிட்டர் குருமூர்த்தியை நட்பு ரீதியாக சந்தித்து பேசினேன், அன்புமணியை சந்தித்து பேசியது குறித்து பின்பு சொல்கிறேன் - ராமதாஸ்
#WATCH | அன்புமணியுடன் ராமதாஸ் சந்திப்பு? தைலாபுரம் தோட்டத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் ராமதாஸ்.#SunNews | #PMK | #Anbumani | #Ramadoss pic.twitter.com/YYQXbhZMsX
— Sun News (@sunnewstamil) June 7, 2025 -
Jun 07, 2025 11:03 IST
புகார் மனுவில் குற்றச்சாட்டு
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஏ.சங்கர் மற்றும் பொருளாளர் ஈ.எஸ். ஜெயராம் ராஜினாமா செய்தனர்.
-
Jun 07, 2025 11:03 IST
ஆர்சிபி அணி நிர்வாகம் மீது 3வது FIR
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் மீது 3வது FIR பதியப்பட்டது.
கூட்ட நெரிசலில் காயமடைந்த வேலு என்பவர் அளித்த புகாரின் பேரில் கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு
ஆர்சிபி நிர்வாகம் தரப்பில் இலவச அனுமதி என்று கூறியதால் தான் வந்தது. நுழைவாயில் 6ல் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
Jun 07, 2025 10:25 IST
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ராஜினாமா
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில், KSCA நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
-
Jun 07, 2025 10:21 IST
மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர், திருவண்ணாமலை, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 10:03 IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் நாளை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர் 6வது தெரு, ரயில் நிலைய சாலை, காமராஜர் நகர், மகாத்மா காந்தி 1 முதல் 9 வது தெரு வரை, 3 வது பிரதான சாலை, தண்ணீர் தொட்டி அருகில், தெற்கு கட்டம் 6 முதல் 9 வது தெற்கு கட்டம், 3வது குறுக்கு தெரு, 2 வது பிரதான சாலை, 2 வது குறுக்கு தெரு, 9 முதல் 11 வது குறுக்கு தெரு, பிரிவு 1 தெற்கு கட்டம் போன்ற இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 10:01 IST
பக்ரீத் பண்டிகை: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், உன்னத தியாகத்தை போற்றும் வகையில், பக்ரீத் பண்டியை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயரிய தியாகத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம்' என தெரிவித்துள்ளார்.
-
Jun 07, 2025 09:49 IST
காசாவில் ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ.2,500க்கு விற்பனை
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில், ஒரு பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படும் துயரம். உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கப்பட்டுள்ளனர். காஸாவுக்கு இந்தியாவால் இலவசமாக வழங்கப்பட்ட |பிஸ்கட் பாக்கெட்டுகளை பறித்து, ஹமாஸ் அமைப்பினர் இதுபோன்று விற்பனை செய்வதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
-
Jun 07, 2025 09:02 IST
நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாடு முழுவதும் இதுவரை 5364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
-
Jun 07, 2025 08:43 IST
தமிழ்நாட்டில் ஜூன் 10 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில், வரும் 10-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும், 12-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 08:41 IST
மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
-
Jun 07, 2025 08:08 IST
ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மா.செ. கூட்டம்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
-
Jun 07, 2025 08:06 IST
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.
-
Jun 07, 2025 07:44 IST
தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில் - மக்கள் அவதி
தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, வேலூரில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 102.56 டிகிரியும், நெல்லை பாளையங்கோட்டையில் 102.74 டிகிரியும், திருச்சியில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, தஞ்சையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.
-
Jun 07, 2025 07:30 IST
11 பேர் பலி சம்பவம் - பெங்களூருவில் விராட் கோலி மீது புகார்
RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விராட் கோலி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கப்பான் பார்க் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் எச்.எம்.வெங்கடேஷ் என்பவர் அளித்த இந்த புகார், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் விசாரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Jun 07, 2025 07:28 IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 07, 2025 07:17 IST
கேரளாவில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Jun 07, 2025 07:16 IST
இன்று மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து தனி விமானத்தில் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் மதுரை வருகிறார். அதன்பின்னர் சிந்தாமணி பகுதியிலுள்ள தனியார் உணவகத்தில் இரவு தங்குகிறார். நாளை பகல் 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேச உள்ளார்.
-
Jun 07, 2025 07:14 IST
கொரோனா பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய தமிழகப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளைச் சில நாட்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.