Chennai news : சென்னையில் மே மாதம் 27% ஆக இருந்த டெஸ்ட் பாசிடிவ் ரேட் (Test Positive Rate) தற்போது (ஜூன் 20) 1.5% ஆக குறைந்துள்ளது. செவ்வாய்க் கிழமை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுடன் தரவுகளை பகிர்ந்து கொண்டனர். மே 10ம் தேதி அன்று சென்னையில் இருந்த 27% என்ற கொரோனா தொற்று விகிதம் தற்போது ஜூன் 19ம் தேதி அன்று 1.6% ஆகவும், ஜூன் 20ம் தேதி அன்று 1.5% ஆகவும் குறைந்ததாக கூறியுள்ளது சென்னை மாநகராட்சி. ஜூன் 20 அன்று 30 ஆயிரம் நபர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஜூன் 20ம் தேதி அன்று பெறப்பட்ட 23800 சாம்பிள்களில் தொற்று விகிதம் 0.6% மட்டுமே. தொற்று அதிகமாக உள்ள முதல் 30 பகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகளை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நோய் தொற்று குறைவாக உள்ள 170 பகுதிகளில் பணியாற்றும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களை குறைப்பது குறித்து முடிவு எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. முதல் 30 பிரிவுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது.
கடந்த வாரம் சூரப்பேட்டையில் அதிக அளவு கொரோனா தொற்றுகள் பதிவானது. வடபெரும்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை. அமைந்தக்கரை, அம்பத்தூர், பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமை அன்று 47 நபர்கள் மட்டுமே கோவிட் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 21ம் தேதி அன்று 15 மண்டலங்களில் 163 கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள்.
உதவி மையத்தை அணுகி உதவி பெறும் நபர்களின் எண்ணிக்கையும் இந்த 15 மண்டலங்களில் குறைந்துள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது. மே மாதம் 250 ஆம்புலன்ஸ்கள் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால் ஜூன் 21ம் தேதி அன்று 44 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
நகரில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மக்களில் 43% நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 45 முதல் 59 வயது வரை உள்ளவர்களில் 49% நபர்கள் குறைந்தபட்சமாக ஒரு டோஸாவது பெற்றுக் கொண்டனர். 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 35 லட்சம் நபர்களில் வெறும் 3.36 லட்சம் பேர் மட்டுமே முதல் டோஸை பெற்றுக் கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.