சென்னை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதி உள்ளது. இப்பகுதி ஈ.சி.ஆர் சாலை அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், ஈ.சி.ஆர். சாலையில் பண்டிதமேடு பகுதியில் இன்று மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார், சாலையோரம் அமர்ந்து மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்களும் பரிதமாக உயிரிழந்தனர். பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள், விஜயா, யசோதா, ஆனந்தம்மாள், கவுரி ஆகிய 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்தை ஏற்படுத்திய காரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்தனர். காரில் இருந்த நபர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், போலீசாரின் வாகனத்தை சிறைபிடித்த மக்களால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர்களை காவல் நிலையம் அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு விபத்து ஏற்படுத்தியவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“