/indian-express-tamil/media/media_files/2025/09/22/chennai-one-app-2025-09-22-11-00-03.jpg)
Chennai one app
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (கும்டா) இரண்டாவது ஆணையக் கூட்டத்தில், சென்னை பெருநகரப் பகுதிக்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
மேலும் இக்கூட்டத்தில், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ‘சென்னை ஒன் ஆப்’ (Chennai One app) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளையும் ஒரே செயலியில் இணைக்கும் ஒரு முன்னோடி திட்டமாக இது அமைந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: ‘க்யூ.ஆர்.’ கோடு
இந்த ‘சென்னை ஒன்’ செயலி, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ மற்றும் டாக்ஸி என அனைத்துப் போக்குவரத்து முறைகளையும் ஒரே ‘க்யூ.ஆர்.’ பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இனி, மக்கள் ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக பயணச்சீட்டு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த செயலி மூலம், மக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக எளிதாக பணம் செலுத்தி, ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்துப் போக்குவரத்து முறைகளிலும் பயணிக்கலாம். இதனால், பயணச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது.
இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் இந்த செயலி, மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.