சென்னை பல்லாவரம் பகுதியில் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் தான் உடல்நல கோளாறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னை பல்லாவரம் அடுத்து உள்ள மலைமேடு, மாரியம்மன் கோவில் தெரு, முத்தாலம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்கள் திடீரென வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல இன்று காலையும் 6க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் காவல் துறை அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், பல்லாவரம் கன்டோன்மென்ட் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் குடிநீரில் ஏதேனும் கலந்து இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவீதி என்பவர் (54 வயது) உயிரிழந்துள்ளார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் இன்று உயிரிழந்தார். இருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்துவந்த குடிநீரை குடித்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தநிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் பல்லாவரம் காவல்துறையினர், ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”23 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவுகளில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்தப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரணம் தெரிய வந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“