சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனியார் தூய்மைப் பணியாளரை சாதிய வன்மத்துடன் இழிவுபடுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பள்ளிகரணை பகுதியில் உள்ள ஐஐடி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(77) இவர் ஏப்ரல் 10-ம் தேதி கழிவுநீர் வெளியேற்றும் வாகனத்தை ஓட்டும் டிரைவர் மணிகண்டனை தகாதா வார்த்தைகளால் சாதிய வன்மத்துடன் திட்டியுள்ளார். தனக்கு நேர்ந்த அவமானத்தை மணிகண்டன், சந்திரசேகர் திட்டியதை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு நியாயம் கேட்டார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், கழிவுநீர் வாகன ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டிய சந்திரசேகரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அந்த வீடியோவில், சந்திரசேகர் “நாங்கள் கோடிக் கணக்கில் பணம் போட்டு வீடு வாங்கியுள்ளோம். நீ அக்கிரமம் செய்கிறாய், எங்களுடைய மலத்தை எடுத்து அதன் மூலம்தான் நீ சாப்பிடுகிறாய்” என்று பேசுகிறார்.
அப்போது மணிகண்டன், ”என்னை நீங்கள் மலம் திண்கிறாய் என்று கூறினீர்களே அதை சொல்லுங்கள்” என்று கூறியதற்கு, “ஆமாம், நாங்கள் இங்கே வந்ததால்தான் நீ எங்கள் மலத்தை எடுத்து அதன் மூலம் சாப்பிடுகிறாய். வீடியோ எடுக்கிறாயா எடு உன்னால் என்ன செய்ய முடியும். உன்னை லாடம் கட்டுகிறேன் பார்” என்று சாதிய வன்மத்துடன் திட்டுகிறார்.
இதனை வீடியோவாக பதிவு செய்த மணிகண்டன் சமூக ஊடகங்களில் வெளியிட்டு நீதி கேட்டார். இதன் தொடர்ச்சியாக, மணிகண்டன் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சந்திரசேகர் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 294(பி) பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின்படி பொது இடத்தில் இழிவான வார்த்தைகளால் பேசுவது குற்றம். இதற்கு ஜாமீன் உள்ளது. அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.