/indian-express-tamil/media/media_files/2025/10/06/greater-chennai-corporation-parking-2025-10-06-08-58-18.jpg)
சென்னை பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமல்: முன்னாள் ஒப்பந்ததாரருக்கு தற்காலிக அனுமதி
சென்னையில் 3 மாதங்களாக இலவசமாக இருந்த பெருநகரச் சென்னை மாநகராட்சி (GCC) பார்க்கிங் இடங்களில், கட்டணம் வசூலை மீண்டும் தொடங்குவதற்கு அதன் முன்னாள் ஒப்பந்ததாரரான டூர்க் மீடியா சர்வீசஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, 2 மாதங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் என்றும், இது இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட சமரசத் தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டூர்க் மீடியா சர்வீசஸ், பெருந்தொற்று (COVID-19) காலத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புகளைக் காரணம் காட்டி நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இதனைத் தொடர்ந்து சமரசத்திற்கு ஒப்புக் கொண்டதன் விளைவாக, ஒரு புதிய நீண்ட கால ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை பார்க்கிங் கட்டணங்களை வசூலிக்க இந்த நிறுவனத்திற்குத் தற்காலிகமாகப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. டூர்க் மீடியா, பிப்ரவரி 2019 முதல் 2024 வரை 5 ஆண்டுகள் மாநகராட்சியின் பார்க்கிங் ஒப்பந்ததாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டூர்க் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பின்னர், ஜூலை 2024-இல் டெக்ஸ்கோ (Texco) என்ற தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் லிமிடெட் ஆறு மாத காலத்திற்குப் பார்க்கிங் பணியை மேற்கொண்டது. டெக்ஸ்கோ கார்களுக்கு மணிக்கு ரூ. 20, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 வீதம் கட்டணம் வசூலித்தது.
ஆனால், டிச.2024-ல் அதன் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் கட்டணம் வசூலைத் தொடர்ந்தது. அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநகராட்சி டெக்ஸ்கோவின் செயல்பாடுகளை 10 முக்கிய இடங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியது. அப்போதுதான் கார்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5, கனரக வாகனங்களுக்கு ரூ. 60 எனச் சமமான கட்டணத்தையும் (flat rates), டிஜிட்டல் கட்டண முறையையும் அறிமுகப்படுத்தியது.
இதற்கிடையில், ஜூலை 2024-இல் புதிய ஒப்பந்ததாரர் இறுதி ஆகும் வரை மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்துப் பார்க்கிங் இடங்களிலும் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. டெக்ஸ்கோ நிறுவனம் கடந்த ஓராண்டில் மாநகராட்சிக்கு ரூ. 2 கோடி செலுத்தி உள்ளதாக நிதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.