போகியன்று டெல்லியானது சென்னை : புகை மூட்டத்தால் மக்கள் அவதி

டெல்லியும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் பனியும் புகையுமாக எதிரில் வருபவர் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது. அதுபோல சென்னை நகரமும் இன்று இருந்தது.

போகி தினமான இன்று காலையில் சென்னை நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. தீபாவளிக்கு அடுத்த சில நாட்கள் டெல்லியும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் பனியும் புகையுமாக எதிரில் வருபவர் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது. அது போல சென்னை நகரமும் இன்று காலை இருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகியின் மரபு. இதனால் சென்னை நகர மக்கள் பழைய பொருட்களை எல்லாம் வீதியில் போட்டு தீ வைத்துவிடுவார்கள். இதனால் போகியன்று புகை மண்டலமாக காட்சியளிக்கும். ஆனால் காலையில் சூரிய உதயத்தின் போது புகை அதிகமாக இருக்காது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னை நகரம் நெடுநேரம் வரையில் புகை மண்டலமாக காட்சியளிக்கும்.

pogi 2018 - chennai - ietamil

சென்னை நகரில் போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் சிறார்கள்.

நேற்று 12.1.18 இரவே பலரும் பழைய பொருட்களை எரிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் இரவில் இருந்தே சென்னை நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க ஆரம்பித்தது. பனியும் அதிகமாக இருந்ததால், சாலைகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாத அளவுக்கு புகை அதிகமாக இருந்தது. காலை 8 மணி வரையில் வாகனங்களில் பயணித்தவர்கள் ஹெட் லைட்டை போட்டவாறே பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. இதனால் காலை 9 மணி வரையில் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மூச்சுதிணறால் பாதிக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தரையிரங்க வேண்டிய விமானங்கள் ஓடுதளம் தெரியாததால், விமானத்தை தரையிறக்குவதில் சிரமத்தை சந்தித்தனர்.

pogi 2018, chennai - ietami

சென்னை சாலைகளில் புகையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னைக்கு வர வேண்டிய 18 விமானங்கள் பெங்களூர், ஐதராபாதி திருப்பிவிடப்பட்டன. சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள், தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அதேபோல சென்னைக்கு வரும் ரெயில்களும் புகை மூட்டத்தால் வேகத்தை குறைத்தே இயக்கப்பட்டது. இதனால் செண்ட்ரல், எழும்பூர் வர வேண்டிய ரெயில்கள் தாமதமாகவே சென்னைக்கு வந்து சேர்ந்தன.

கடந்த ஆண்டும் இதேபோல போகியன்று சென்னை நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு அதை விட அதிக அளவில் புகை சூழ்ந்து காணப்பட்டது. காலை 10 மணி வரையில் புகையின் தாக்கம் இருந்தது. நண்பகலுக்குப் பின்னர்தான் புகையின் தாக்கம் முற்றிலும் குறந்தது.

சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களிலும் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீட்டு முன்பு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினார்கள். சிறுவர்கள் தீ முன்பு ஆடிப்பாடி போகியை உற்சாகமாக கொண்டாடினார்கள். இதனால் அந்த ஊர்களிலும் புகையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது அந்தந்த ஊர்களில் போக்குவரத்தை பாதித்தது.

ஒவ்வொரு ஆண்டும் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதும், போகியன்று பழைய பொருட்களை எரிப்பதால், சுற்றுச் சூழல் மாசுப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே நிலை நீடித்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் டெல்லியைவிட அதிக மாசடைந்த நகரமாக சென்னை இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

×Close
×Close