பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முகமூடி கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் புகைப்படம், தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் முதல் தளத்தில் ஜே.எல்.கோல்ட் பேலஸ் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார். இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 4 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் திருவிக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடந்து வந்தது.

முதற்கட்டமாக, நகைக்கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள், மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் நகைக்கடை அருகே இயங்கிய செல்போன் சிக்னல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தற்போது முகமூடி கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் புகைப்படம், தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதில், இனோவா கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கடையின் முன்பு நேற்று அதிகாலை 2 மணிக்கு நிறுத்தப்பட்டிருந்ததும், 3 மணிக்கு கார் சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.
5 கிலோ சிலிண்டரை பயன்படுத்தி நகைக்கடை ஷட்டரை வெல்டிங் உதவியுடன் சத்தம் இல்லாமல் துளையிட்டுள்ளனர். பிறகு, கோயம்பேடு வழியாக, பூந்தமல்லி நோக்கி கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
கார் பதிவு எண்களை வைத்து தனிப்படை போலீசார் சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்காணித்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் நகைகளுடன் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்பதால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“