நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 8 மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலான ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்னை புற சாலை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை புறவழி சாலை 133.381 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சிங்கபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும்வகையில் அமைக்கப்பட உள்ளது. நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 8 மாநில நெடுஞ்சாலைகளை இந்த புறவழி சாலை இணைக்க உள்ளதால், சென்னை சிட்டி மற்றும் துறைமுகபகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கே மாமல்லபுரத்தையும் வடக்கே எண்ணூர் பகுதியையும் இணைக்கும் வகையிலான சுற்றுவட்ட சாலை அமைக்க தனியார் நிலங்களை எடுத்துக்கொள்ளும் பணிகள் துவங்கியுள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறை, வனப்பகுதியில் சாலை அமைய உள்ள பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த சாலை, வண்டலூர் மற்றும் திருவள்ளூர் - பொன்னேரி - பஞ்செட்டி என 4 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லா முக்கியமான ரேடியல் சாலைகளை இணைப்பதினால், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி ஏற்றம் பெறுவதினால், மாநிலத்தின் பொருளாதாரமும் கணிசமாக அதிகரிக்கும். இந்த புறவழிச்சாலைகளை பயன்படுத்துவதால், மக்களின் காலம் மற்றும் நேரம் மிச்சம் ஆவதோடு, துறைமுகம் வகையிலான போக்குவரத்தும் துரிதமாக்கப்படும். இதன்மூலம், தென்மாவட்டங்களுக்கு சரக்கு போக்குவரத்து அதிகளவில் நடைபெறுவதற்கு வழிவகை ஏற்படும் என்று அவர் கூறினார்.
இந்த சாலை திட்டம் துவங்கப்பட்டு சில ஆண்டுகள் ஆனபோதிலும், 2018ம் ஆண்டில் தான் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம், ஒப்புதல் வழங்கியது.
இந்த சாலை, கூவம் மற்றும் கொசஸ்தலையாறு உள்ளிட்ட ஆறுகளையும், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட எண்ணற்ற நீர்நிலைகளின் மீது அமைய உள்ளதாக கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியும் பெறவேண்டிய நிலையில் இருந்தநிலையில், அந்த அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.
இந்த சாலை மண்ணூர் , திருட்டேரி மற்றும் செங்குன்றம் ரிசர்வ் காடுகளின் வழியே ஊடுருவி செல்ல உள்ளது. இதற்கு மாற்று வழிகளை ஆராயும் நடவடிக்கைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்த சாலை திட்டத்திற்காக 4,797 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இவற்றில் 2,168 மரங்கள் சாலைஓரங்களில் நடப்பட உள்ளது. எஞ்சிய மரங்கள் வேறு இடங்களில் நடப்பட உள்ளன. இந்த சாலை திட்டத்திற்காக 800க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.