சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அஞ்சும் ஒரே இன்னல் என்னவென்றால், பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் தான். அதுவும் பண்டிகை காலத்தில் கூட்டநெரிசல் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.
இதனை கட்டுக்குள் கொண்டுவர, சென்னையில் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசா நகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று வருகிறது.

ஏப்ரல் மாதம் இந்த மேம்பாலம் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து இன்னல்கள் முற்றிலுமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2001ஆம் ஆண்டு இந்த திட்டப்பணிக்காக ரூ.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு திருத்திய மதிப்பீடாக 2020ஆம் ஆண்டு, ரூ.234 கோடி செலவில் இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகளானது நடைபெற்று வந்தது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக, அந்த பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, வண்டலூரில் இருந்து தாம்பரம் வருகின்ற மேம்பாலம் பாதையில் ஒரு பகுதி திறக்கப்பட்டது.
இதன்பிறகு, பெருங்களத்தூரின் மேற்கு பகுதியில் ரயில்வே கேட் மூடப்படும் பொழுது பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வந்தார்கள். இதனாலேயே வாகன ஓட்டிகள் இந்த மேம்பால திட்டப்பணி விரைவில் நிறைவடைய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பெருங்களத்தூர் ஸ்ரீனிவாச நகரில் நடைபெறும் மேம்பால பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு ஸ்ரீனிவாச நகரில் இந்த மேம்பாலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பகுதியில் ஐந்து மீட்டர் அகலத்தில், இருவழி பாதையாக கட்டப்படுகிறது. மேலும், கட்டுமானப்பணிகள் பெருமளவு முடிவிற்கு வருவதாக கூறப்படுகிறது.
அதோடு, மேம்பாலம் இறங்கும் இடத்தில் மணல்களை போட்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெருங்களத்தூர் ரயில்வே பகுதியை பொதுமக்கள் கடந்து வருவதற்கு உதவும் விதத்தில் இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி விரைவில் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலையத்துறை தெரிவித்துள்ளனர்.