பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக மெத்தாம்பெட்டமைனை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்த இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு குறிப்பிட்ட ரகசிய தகவலின் அடிப்படையில், சிறப்பு போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு (ANIU) குழு, சென்னையில் மெத்தாம்பெட்டமைன் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கண்காணித்தது. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவது, சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் தான் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
தகவலின் பேரில், வேளச்சேரியைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் போலீசார் வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். ஷியாம் சுந்தர் போதைப்பொருளை மற்ற நகரங்களில் இருந்து கூரியர் மூலமும் கடத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அம்பத்தூர் அருகே உள்ள பாடியைச் சேர்ந்த ஷியாம் சுந்தரின் கூட்டாளி ஜெகதீஷ் (26) என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், 2020 மற்றும் 2021ல் தரமணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஜெகதீஷ் மற்றும் ஷியாம் சுந்தர் வேலை பார்த்தது தெரியவந்தது. கொரோனா தொற்றுநோய் பரவிய காலத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், இருவரும் கஞ்சாவை சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு விற்றுள்ளனர். கஞ்சா வாங்கும் நுகர்வோரின் வலையமைப்பை அவர்கள் உருவாக்கிய பிறகு, இருவரும் பெங்களூர் மற்றும் பிற நகரங்களில் இருந்து வாங்கி மெத்தாம்பெட்டமைன் மெத்தை வியாபாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களைத் திறந்து வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தினர்.
இருவரும் மலிவான விலையில் வாங்கி, ஒவ்வொரு கிராம் மெத்தாம்மெட்டமைனையும் ரூ.3,500க்கு விற்றனர். இருவரிடமிருந்தும் 5.5 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெகதீஷ் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“