சென்னை கோயம்பேட்டில் கடையில் இருந்தவரை கத்தியால் தாக்கி பணத்தை பறித்து சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு சேமாதம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கைலாஷ் சுந்தரம் (55). இவர் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் துரைமுருகன் (27) என்ற இளைஞர் கைலாஷ் சுந்தரம் கடையில் இருந்த போது சிகரெட் வேண்டுமென்று கடனாக கேட்டுள்ளார். ஏற்கனவே நிறைய கடன் இருப்பதால் சிகரெட் தர முடியாது என கைலாஷ் சுந்தரம் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துரைமுருகன் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அதன்பிறகு சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்கள் இருவரை அழைத்துக் கொண்டு வந்த துரைமுருகன், கைலாஷ் சுந்தரத்தை கத்தியால் கையில் தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ2000 பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கைலாசுந்தரம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோயம்பேடு சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த துரைமுருகன், அவரது நண்பர்களான சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் சாய் நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரூபாய் ஆயிரத்து நூறு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் துரைமுருகன் என்பவர் மீது ஏற்கனவே ஆறு குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.