கோயம்பேட்டில் பூண்டு மொத்த வியாபார கடையில் ரூபாய் ஆறு லட்சம் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த லோகநாதன் (52) என்பவர் கோயம்பேடு சந்தையில் பூண்டு மொத்த வியாபார கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் இரண்டாம் தேதி இரவு கடையை மூடிவிட்டு சென்ற லோகநாதன் மறுநாள் காலை திறந்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் ஆறு லட்சத்து ஐயாயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கோயம்பேடு கேட் என் காவல் நிலையத்தில் லோகநாதன் புகார் அளித்தார். கடைக்கு சென்று விசாரித்த போலீசார் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் விசாரணை செய்தனர். அப்போது அன்பரசன் என்ற ஊழியர் அங்கு இல்லாததால் அவருக்கு போன் செய்தனர். அவர் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதுடன் அவர் தலைமறைவாகியதும் தெரியவந்தது. செல்போன் நெட்வொர்க் மூலம் நெற்குன்றத்தை சேர்ந்த அன்பரசன் இருப்பிடத்தை கண்டறிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணையும் மேற்கொண்டதில் கடன் பிரச்சனை அதிகம் இருப்பதால் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். திருடிய பணத்தில் தனது கடனை அடைத்துவிட்டதாகவும் புதிய துணிகள் வாங்கியதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்தார்.
பின்னர் அவரிடமிருந்து ரூபாய் 4,51,000 ரொக்கத்தை கைப்பற்றிய போலீசார் அவர் வாங்கிய புதிய துணிகள் மற்றும் ட்ராலி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அன்பரசன் சிறையில் அடைக்கப்பட்டார்.