சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் நடந்தவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "அண்ணா நகரில் உள்ள முக்கிய சந்திப்பில் ஸ்கூட்டரில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கார் எனது அருகில் வந்து நின்றது. அதில் இருந்த இளைஞர் ஒருவர் என்னிடம் பேச வேண்டும் என கூறினார். நான் அங்கிருந்து புறப்பட்டேன். ஆனால் அந்த நபர் வேகமாக வந்து எனது ஸ்கூட்டருக்கு முன்னாள் வழிமறித்து காரை நிறுத்திவிட்டு அநாகரிகமாகப் பேசினார்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையில் புகாரை பதிவு செய்ய தான் அலைக்கழிக்கப்பட்டதையும் பதிவிட்டுள்ளார். காரின் பதிவு எண்ணை படம் எடுத்த பிறகு, அந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு போக்குவரத்து காவலரை அணுகியுள்ளார். பிறகு அண்ணா நகர் ரவுண்டானாவில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும், கே 4 காவல் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டார். அந்தப் பெண் ஒரு பத்திரிகையாளர் என்று கூறிய பிறகுதான் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பெருநகர சென்னை காவல்துறை பெண் பத்திரிகையாளரின் பதிவுக்கு பதிலளித்தது. சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக விசாரித்து கைது செய்ததாக தெரிவித்திருந்தது. அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் அமெரிக்காவிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அண்ணா நகரின் உதவி போலீஸ் கமிஷனர் அகஸ்டின் பால் சுதாகர் கூறுகையில், "கைது செய்யப்பட்ட நபர் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல பொய்யான புகார்கள் வந்ததால் இதுபோன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொள்வதற்காக சில நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பத்திரிகையாளர் கூறியுள்ளது பற்றி கேட்டபோது, "அதுபோன்ற புகார் எதுவும் இதுவரை வரவில்லை. இந்த பிரச்சினைகளை தீர்க்க பிரத்தியேகமாக அம்மா ரோந்து வாகனம் எங்களிடம் உள்ளது. இதன் மூலம் மகளிர் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் பெண்கள் கூடும் பிற பகுதிகள் கண்காணிப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து அவ்வபோது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குற்றம் செய்த பிறகு யாரும் தப்ப முடியாது. பொதுமக்களின் தேவைகளை முடிந்தவரை பூர்த்தி செய்கிறோம், ”என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil