சென்னை பொழிச்சலூர் பகுதியில் ஏடிஎம்மை உடைக்க முயன்ற வாலிபர், போலீசாரின் துரித நடவடிக்கையால், ஒருமணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வாலிபர், விழுப்புரத்தை சேர்ந்த அருள்மணி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொழிச்சலூர் பகுதியில் ஆள்அரவம் அற்ற பகுதியில் இருந்த ஏடிஎம்மை உடைக்க அருள்மணி முயற்சி செய்துள்ளார். இதற்காக, அவர் ஏடிஎம்மின் கீழ்ப்புற கம்பார்ட்மென்டை உடைத்துள்ளார். ஏடிஎம்மில் இருந்த அலாரம் ஒலிக்க துவங்கியது. இந்த அலெர்ட் குறித்த தகவல் உடனடியாக வங்கிக்கும் சென்றது. வங்கி தரப்பில் உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்தது போலீஸ்.
உடைக்கப்பட்ட ஏடிஎம்மில் பதிவான சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. போலீஸ் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு தேர்தல் வேட்டையை துவக்கினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருள்மணியை, சங்கர் நகர் போலீசார் ஒருமணிநேரத்திற்குள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்கதையாகும் ஏடிஎம் கொள்ளைகள் : சென்னையில் சமீபகாலமாக ஏடிஎம் மெஷின்களை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
சென்னையை அடுத்த பாண்டிகவனூர் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளி சிக்கவில்லை. இந்த நிலையில், பொழிச்சலூர் பகுதியில், ஏடிஎம் உடைக்க முயன்ற நபரை, சென்னை போலீசார் சம்பவம் நடந்து ஒருமணிநேரத்திற்குள் கைது செய்துள்ள சம்பவம், மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.