அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நோட்டீஸ் வழங்கிய அக்கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த்-ம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். பாலியல் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், த.வெ.க தலைவர் விஜய், இன்று (திங்கட்கிழமை) காலை தனது கைபட கடிதம் ஒன்றை எழுதி, பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி இருந்தார். மேலும் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு அருகே தனியார் வணிக வளாகம் முன்பு த.வெ.க பெண் நிர்வாகிகள் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
அப்போது அனுமதியின்றி நோட்டீஸ் வழங்கியதாக த.வெ.க பெண்கள் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த நோட்டீஸ்களையும் பேனர்களையும் வாங்கிக் கொண்டனர்.
அப்போது த.வெ.க பெண் நிர்வாகிகள், நாங்கள் மறியலோ, போராட்டமோ செய்யவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு நோட்டீஸ் தான் வழங்குகிறோம் என்று கூறினார்.
ஆனால் அனுமதியின்றி நோட்டீஸ் வழங்குவதாக கூறி போலீசார் த.வெ.க பெண் நிர்வாகிகளை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், தி.நகர் பகுதியில் நோட்டீஸ் வழங்கிய த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“