2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தகுதியான மகளிருக்கு பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தேர்தல் சமயத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து விட்டு தற்போது தகுதியான மகளிருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ,கவினர் விமர்சனம் செய்திருந்தனர். தொடர்ந்து சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் இத்திட்டத்தில் தகுதியான பெண்களை முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எப்படி தேர்வு செய்வார்கள் என்பது குறித்து திரைப்பட நகைச்சுவை காட்சி வைத்து விமர்சனம் செய்து ட்விட்டர் பதிவிட்டார்.
இது முதல்வர், நிதியமைச்சர் மட்டுமில்லாது தமிழ்நாட்டு பெண்களையும் இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டும், அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் எனக் கோரி மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்-வாக இருக்கும் சவுக்கு சங்கர் தி.மு.க அரசின் செயல்கள் மற்றும் காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. இவருக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 'வாய்ஸ் ஆஃப் சவுக்கு' என்ற ட்விட்டர் பக்கம் உள்ளது.
இந்தநிலையில், வாய்ஸ் ஆஃப் சவுக்கு பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் சென்னை போலீசாரால் நேற்று இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து சவுக்கு சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, இந்த கைதுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே முதலமைச்சர் மற்றும் சென்னை காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது பற்றாக்குறையான பட்ஜெட்டை யாரும் விமர்சிக்க கூடாது என்று அவர் நினைப்பதாகவும் கூறி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/