![Police Man Arun](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/10/22/ZjP3KVqWWTJHfaBcOJTr.jpg)
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான வழக்கு குறித்து பதியப்பட்ட எப்..ஆர். தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சென்னை மாவட்ட ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், நேற்றிரவு தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் பதிவு ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் பதிவு வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சிகள், காவல்துறையை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துணை ஆணையர் அருண், “புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்.ஐ.ஆர். அந்தச் சம்பவம் நடைபெறும்போது, ஞானசேகரன் மீது போன் ஃப்ளைட் மோடில் இருந்தது. எனவே அவர், 'சார்’ என பேசியதாக பரவும் தகவல் போலியானது. இந்த வழக்கில் சார் என்று யாரும் இல்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரை மாலை 4 மணிக்கு புகார் அளித்தனர். 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அடுத்த நாளுக்குள் எஃப்ஐஆர் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம். கடந்த 2013ல் இருந்து ஞானசேகரன் மீது 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் திருட்டு உள்ளிட்ட வழக்குகளே தவிர பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, அவர் மீது வழக்கு ஏதும் பதிவாகவில்லை. இதில், ஆறு வழக்கில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மாணவி கொடுத்துள்ள புகாரை தவிர, இதுவரை இவரால் பாதிக்கப்பட்டதாக எந்தப் பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. ஞானசேகரனின் போன் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் புகார்கள் பெறப்படும். போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எஃப்.ஐ.ஆர் இணையதளத்தில் தானாகவே லாக் ஆகித்தான் இருக்கும். பாதிக்கப்பட்டோரின் விபரங்களை பார்க்க முடியாது.
தற்போது ஐ.பி.சி.யில் இருந்து புதிய சட்டங்களான பி.என்.எஸ்-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் எப்.ஐ.ஆர் நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் எப்.ஐ.ஆர் லீக் ஆகியிருக்கலாம். இதனை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. 56 கேமராக்கள் வேலை செய்கின்றன. காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே ஆய்வுக் கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.