/indian-express-tamil/media/media_files/qi9bnPCmZzNjXs8VjcTi.jpg)
பள்ளி வேலை நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் புதன்கிழமை காலை தண்ணீர் லாரி மோதி பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வேலை நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் கனரக வாகனங்களை அனுமதித்த சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த யாமினி தனது 10 வயது மகள் சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக புதன்கிழமை (18.06.2025) காலை 8.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பெரம்பூர் பகுதியில் யாமினி திடீரென பிரேக் பிடித்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து சௌமியா தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி சிறுமியின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து, பீக் ஹவர் எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்களை சாலையில் அனுமதித்ததால் நிகழ்ந்துள்ளது. இதைத் தடுக்கத் தவறிய காரணத்திற்காக, செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதேபோல், போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, காவல் ஆணையர் அருண் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்படி, சென்னையில் இனிவரும் காலங்களில், காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உட்பட எந்த இடத்திலும் பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இந்த உத்தரவை மீறி கனரக வாகனங்களை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக் கூடாது என்றும் ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும், பள்ளி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் பள்ளிகளின் வாயில்களில் காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும் என்றும் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.