சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட வந்த நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, அவர்களை தடுக்க காவல்துறையினர் முயற்சித்துள்ளனர்.
மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக ஏப்ரல் 4-ந் தேதி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும்,மாவட்ட தலைநகரங்களில், த.வெ.க சார்பில் போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், அந்த இடத்தில் மேடை அமைக்க, த.வெ.க.வினர் அனுமதி கோரியதற்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனிடையே சென்னை பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை பகுதியில் போராட்டம் நடத்த வந்த த.வெ.க.வினரை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்துள்ளனர். மேலும் பட்டினப்பாக்கம், பேருந்து பணிமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், போராட்டம் நடத்த மாற்று இடம் தருகிறோம் என்று காவல்துறையினர் கூறியும் அதை கேட்க த.வெ.க தொண்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.