Advertisment

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டது; போலீசாரின் விளக்கத்தால் நீதிபதி அதிருப்தி

போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாமல் எலித் தொல்லை அதிகமாக காணப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கடித்ததால் அதன் அளவு குறைந்து விட்டது – போலீசார் விளக்கம்

author-image
WebDesk
New Update
Coimbatore news, Latest Coimbatore news, Cannabis news, 200 kg cannabis seized in Coimbatore, கோவையில் கஞ்ச பறிமுதல், 200 கிலோ கஞ்சா பறிமுதல், கோவை செய்திகள், Tamil news, latest Tamil news

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: தங்க நாற்கர சாலைக்கு டி.ஆர் பாலு உரிமை கொண்டாடுவதா? அண்ணாமலை கேள்வி

பின்னர் அந்தப் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இந்த வழக்கு போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர். அப்போது கைது செய்யப்பட்ட 3 பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையில் 3 பெண்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் கோர்ட்டில் ஒப்படைத்த போது அதில் 19 கிலோ கஞ்சா குறைவாக இருந்தது. இதனையடுத்து, கஞ்சா ஏன் குறைவாக இருக்கிறது என்று போலீசாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது எழுத்துபூர்வமாக கடிதம் ஒன்றை நீதிமன்றத்தில் போலீசார் அளித்தனர். அதில், "குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சா, போதைப் பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாமல் காணப்பட்டது. மேலும் மழையாலும் கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் அங்கு எலித் தொல்லை அதிகமாக காணப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கடித்ததால் அதன் அளவு குறைந்து விட்டது" என்று தெரிவித்திருந்தனர்.

கஞ்சாவை காவல் நிலையத்தில் உள்ள எலிகள் தின்று விட்டதாக போலீசார் அளித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பதிலை கேட்ட நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்க தவறியதால், குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்களையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment