ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘உண்மைக்கு புறம்பாக தன்னைப் பற்றி அவதூறாக திரித்து புனையப்பட்ட உரையாடலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பொய்யான அவதூறு கருத்துகளை பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையி்ல் அடைத்தனர்.
இதுஒருபுறம் இருக்க நீதிமன்றத்தை விமர்சித்து ரங்கராஜன் வேறொரு வீடியோ வெளியிட்டு இருந்ததாகவும், அதற்கு சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் சமூக வலைதளம் வழியாகவே சில கருத்துக்களை பதிலாக அளித்ததாகவும், இந்த கருத்து குறித்து வலைத்தளத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கடுமையாக ஒரு கருத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வழக்கறிஞர் இதுபற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“