பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்கள் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தினசரி அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாண்டு வருகிறது. அதேநேரம் இன்னும் 10 வருடங்களில் சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னைக்கு வெளியே பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விமான நிலையம் சுமார் 5476 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இதற்கான நிலம் வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்த முடிவு செய்த நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் பல குழுக்களாக இணைந்து கடந்த மூன்றரை மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த விமான நிலையத்திற்காக விவசாய நிலத்தை கேட்கிறார்கள் என்று கூறி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராம மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், விமான நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான முதல் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. காஞ்சிபுரம் வட்டம் பொடவூர் கிராமத்தில் நில எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம், ஏப்ரல் 4 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காரை அருகே உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு பேரணியாக வந்து முற்றுகையிட முடிவு செய்தனர். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டிராக்டரில் ஊர்வலமாக செல்ல கிராம மக்கள் திங்கள்கிழமை ஏகனாபுரம் அருகே கூடினர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பொதுமக்களை கைது செய்து சுங்குவார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர், அங்கு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பரப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உள்ளிட்ட அருகாமையில் உள்ள 4 மாவட்ட போலீசாரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராகப் போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 137 பேர் மீது மூன்று பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“