Chennai Tamil News: சென்னையின் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் முடிவில்லாப் பிரச்சனையாக திகழ்கிறது.
இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு காவல்துறை பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் வேளையில், மக்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வது காவல்துறைக்கு மேலும் தலைவலியைக் கொடுக்கிறது.
இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னை காவல்துறை அமல்படுத்துகிற புதிய திட்டத்தைப் பற்றி தற்போது காணலாம்:
பள்ளிக் குழந்தைகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை நெறிமுறைகளை கடைபிடிக்க டிப்ஸ் கொடுக்கும் படி ஓர் திட்டத்தை போக்குவரத்துத் துறை கொண்டுவந்துள்ளது.
யு.கே.ஜி., முதல் ஏழாம் வகுப்பு வரையிலான குழந்தைகள், வாகன ஓட்டிகளை (அவர்களின் பெற்றோராக இருந்தாலும் சரி, அந்நியராக இருந்தாலும் சரி) கண்காணித்து சாலை விதிமுறைகளை அறிவுறுத்துவதற்காக, சென்னை காவல்துறை ‘சூப்பர் கிட் காப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தங்கள் பெற்றோர், ஆட்டோ ரிக்ஷா மற்றும் வேன் ஓட்டுநர்களையும் கண்காணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கு ‘சூப்பர் கிட் காப் கார்டு’ வழங்கப்படும். சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தின் அடிப்படை விதிகள் ‘சூப்பர் கிட் காப் கார்டில்’ பொறிக்கப்பட்டிருக்கும்.
ஒரு லட்சம் அட்டைகள் விநியோகிக்கவிருக்கிறது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சடிக்கப்படவுள்ளது.
மாணவர்கள் வெளியே செல்லும்போது காப் கார்டை எடுத்துச் செல்லவேண்டும். அவர்களின் கார்டில் 12 வாகனங்கள் சாலை விதிகளை கடைபிடித்தார்களா இல்லையா என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதை குறித்தால் போதுமானது. நிரப்பப்பட்ட கார்டுகளை 15 நாட்களுக்குப் பிறகு தன்னார்வ தொண்டர்கள் சேகரிப்பார்கள்.
கார்டுகள் நிரப்பப்பட்டவுடன், குழந்தைகளுக்கு சேவை மற்றும் கற்றல் பயிற்சியின் ஈடுபாட்டிற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் 12 வாகனங்களின் ஓட்டுநர்கள் விதிகளை அதன்பிறகு பின்பற்றுகிறார்களா இல்லையா, சாலை போக்குவரத்து மேம்படுகிறதா என்பதை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் அதற்கு தொடர்புடைய வழிமுறைகள் மூலம் தரவு பகுப்பாய்வு செய்யப்படும்.
இதையடுத்து, சென்னையில் உள்ள 250 பள்ளிகளைச் சேர்ந்த 7-12 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 15,000 மாணவர்கள், ஆர்.எஸ்.பி., கேடட்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து காவலர்கள் அமைப்பு (TPTWO), தன் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை குறிப்பிட்டது.
மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அதன் நடைமுறை குறித்து பல்வேறு நுணுக்கங்கள் குறித்து போக்குவரத்து காவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த முன்முயற்சியானது, சென்னை காவல் துறையுடன் இணைந்து அதன் சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் யூத் இந்தியா (YI) ஆல் உருவாக்கப்பட்ட கற்றல் மற்றும் விழிப்புணர்வுத் திட்டமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil