விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று(செப்.4) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படுகிறது.
சீனிவாசபுரம், பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், ராமகிருஷ்ணா நகர் (எண்ணூர்) ஆகிய 5 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈ.வி.ஆர் சாலை, , ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் சாலை, கோடம்பாக்கம் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் சாலை, டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டிஜிஎஸ் தினகரன் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, ஆர்.கே. சாலை, கச்சேரி சாலை மற்றும் தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
அடையாறில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் பாயின்ட்டில் திருப்பி விடப்பட்டு ஆர்.கே மட் ரோடு, மந்தவெளி சந்திப்பு, லஸ், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை, ஒயிட்ஸ் சாலை, அண்ணாசாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”