புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
2024 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில், குறிப்பாக மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும்.
இந்தநிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு 18000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் உள்ள 100 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31 ஆம் தேதி மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் துறையினரால், குதிரைப்படைகள் மற்றும் ஏ.டி.வி. எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது; வாடகை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை
இரவு 1 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
கடற்கரையில் மணற்பகுதியில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
1 மணி வரை மட்டுமே கேளிக்கை விடுதி, ரிசார்ட், ஹோட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“