சென்னை ராமாபுரம் அருகே சாலையில் கிடந்த ஏ.கே 47 ரக துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து சி.ஆர்.பி.எப் (CRPF) படையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏ.கே-47 ரக துப்பாக்கியின் குண்டுகள் சாலையில் கிடந்தன. துப்பாக்கியில் பொருத்தும் படி அதற்கான மேகஸின் கவரில் லோடு செய்யப்பட்டு இருந்த குண்டுகளை தாம்பரத்தை சேர்ந்த சிவராஜ் என்ற இளைஞர் கண்டெடுத்தார். இது தொடர்பாக ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அவர் உடனே தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், அந்த குண்டுகள் சி.ஆர்.பி.எப் படை வீரர்களுக்கு சொந்தமான துப்பாக்கி குண்டுகள் என்பது தெரியவந்தது. பூந்தமல்லி சி.ஆர்.பி.எப் கம்பெனியில் இருந்து ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் செல்லும் போது ஏகே 47 மேகஸின் மற்றும் 30 தோட்டாக்கள் வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் துப்பாக்கி குண்டுகளை சி.ஆர்.பி.எஃப் படைவீரர்களிடம் ஒப்படைத்த ராமாபுரம் காவல்துறையினர், பொறுப்புடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இளைஞர் சிவராஜை பாராட்டினர்.