சென்னையில் குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை திண்டிவனம் அருகே உள்ள மெடுவரை மேம்பாலத்தில் நேற்று இரவு 12 மணியளவில் தரமணி காவல் நிலைய தலைமை காவலர் செந்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது அவரது கார் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய செந்தில் சம்பவ இடத்தில் நிற்காமல் காரில் வேகமாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் அவரை விரட்டிச் சென்றனர். கத்திப்பாறை மேம்பாலம் அருகே செந்திலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவர் போதையில் இருந்ததாக குற்றம் சாட்டினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், செந்திலின் காரை பறிமுதல் செய்து அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையிலும் செந்தில் போதையில் இருந்ததாகவே தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.