scorecardresearch

காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து ஃபேஸ்புக்கில் வீடியோ; மேலும் ஒரு காவலர் சஸ்பெண்ட்

காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரம்; போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் பணியிடை நீக்கம்

police
பிரதிநிதித்துவ படம்

காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி 2 நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலுரையாற்றி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்: 12 மணி நேரம் வேலை சட்டம் வாபஸ் ஆகுமா? திங்கள் கிழமை அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 4,500 ரூபாய் சீருடைப்படி வழங்கப்படும். சென்னை மாநகரில் 2,000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் சென்னை மாநகர காவல்துறைக்காக நவீன உபகரணங்கள் வாங்கப்படும். குற்றவாளிகளை கைது செய்ய 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க ப்ளாக்செயின் பகுப்பாய்வு ரீயாக்டர் கருவி வாங்கப்படும். அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் போன்ற அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

இந்நிலையில் காவல்துறை மானிய கோரிக்கையில் காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை என காவலர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில், காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோபிகண்ணனை சஸ்பெண்ட் செய்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, மானியக் கோரிக்கை அறிவிப்பை விமர்சித்து ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்ட தேனாம்பேட்டை தலைமைக் காவலர் பாலமுருகனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai policeman suspended for criticizing police grant request