சென்னை போரூர் அருகே ராமச்சந்திரா மருத்துவமனை எதிர்புறத்தில் தனியார் கால்டாக்ஸிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 200 க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே இடத்தில் எரிந்து நாசமானது.
சென்னை போரூர் அருகே ராமச்சந்திரா மருத்துவமனை எதிரேயுள்ள மைதானத்தில் தனியார் கால் டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான 300 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று பிற்பகலில் கார்கள் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கின.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a689-300x217.jpg)
உடனடியாக பூந்தமல்லி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அருகில் உள்ள குப்பைக்கிடங்கில் முதலில் பற்றிய தீ, தொடர்ந்து கார் நிறுத்துமிடத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். 214 கார்கள் எலும்புக்கூடானது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a690-300x217.jpg)
தீ விபத்துக்கு காரணம் சிகரெட் தீயா? குப்பையிலிருந்து கிளம்பிய தீயா? அல்லது சதிவேலையா? என விசாரணை நடக்கிறது. ராமச்சந்திரா மருத்துவமனையை கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
பெங்களூருவில் விமான கண்காட்சி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 300 கார்கள் கடந்த சனிக்கிழமையன்று சாம்பலான நிலையில், தற்போது சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்த இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டனர். எரிந்த கார்களில் 15 கார்களுக்கு மட்டும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.