சென்னை போரூரில் ரூபாய் 3 லட்சம் மதிப்புடைய நகையுடன் கிடந்த கைப்பையை காவல்துறையினர் உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை போரூர் சக்தி நகர் பகுதியில் நேற்றிரவு கேட்பாரற்ற நிலையில் கைப்பை ஒன்று கிடந்தது. அதனை மந்தவெளியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று மாலை கண்டெடுத்தார். அதற்குள் நகைகள் பணம் மற்றும் ஆவணங்கள் இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கைப்பையில் இருக்கும் ஆவணங்களை வைத்து போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, அது மதுரவாயலை அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்த பாலாம்பிகை (43) என்ற பெண்மணிக்கு சொந்தமான கைப்பை என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு காவல் நிலையம் வர சொன்ன போலீசார், கைப்பையை ஒப்படைத்த வெங்கடேசன் என்பவரையும் காவல் நிலையம் வரவழைத்தனர். பின்னர் காவல்துறையினர் முன்னிலையில் வெங்கடேசன் அந்த கைப்பையை அதன் உரிமையாளரான பாலாம்பிகையிடம் ஒப்படைத்தார். நகைகள் மற்றும் ஆவணங்களுடன் கைப்பையை பெற்றுக்கொண்ட பாலாம்பிகை, காவல்துறையினர் மற்றும் மனிதநேயத்துடன் கைப்பையை ஒப்படைத்த வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் கிடைத்த கைப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த வெங்கடேசன் மற்றும் போரூர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் மனிதநேயத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்த இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - சென்னை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“