விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று புதன்கிழமை ம.தி.முக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டிருந்த போது தொண்டர்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.
அதனை, படம் பிடித்த பத்திரிகையாளர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேடையில் இருந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அங்கிருந்த தொண்டர்களிடம் பத்திரிகையாளர்களின் ஒளிப்பதிவு கருவிகளை பறிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த ம.தி.மு.க தொண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மூத்த அரசியல்வாதியான வைகோ அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது கடுமையான கண்டனத்திற்குரியது. வைகோ அவர்களின் இந்த செயலையும், பத்திரிகையாளர்களை தாக்கிய மதிமுக தொண்டர்களையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோவின் மீதும் காவல்துறை உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது." என்று சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
வைகோவுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
இந்நிலையில், விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களை தாக்குமாறு உத்தரவிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று மாலை மதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்வில் திரு.வைகோ பேசிக் கொண்டிருந்தபோது தொண்டர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் அங்கிருந்து இருக்கைகள் காலியாக இருப்பதை கண்ட செய்தியாளர்கள் அதனை படம் பிடித்துள்ளனர்
இதனைக் கண்டு ஆவேசம் அடைந்த வைகோ மேடையில் இருந்தபடியே செய்தியாளர்களை நோக்கி காலிப் பயல்கள் என்றும், அவர்களிடம் உள்ள கேமராக்களை பிடுங்குமாறும் தனது தொண்டர்களை நோக்கி ஆவேசத்துடன் பேசி இருக்கிறார். இதையடுத்து அங்கிருந்த ம.தி.மு.க-வினர் செய்தியாளர்களை கொலை வெறியோடு தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு செய்தியாளர்களுக்கு உடல் அளவில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் ஜனம் செய்தியாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உடன் இருந்த சக பத்திரிகையாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உள்ளபடியே இந்த நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரு மூத்த அரசியல்வாதியான வைகோ இவ்வாறு நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியலில் நீள, அகலங்களை ஆய்ந்தறிந்து தெரிந்து கொண்டிருக்கும் வைகோ கொஞ்சம் நிதானத்துடன் இந்த விவகாரத்தை கையாண்டு இருக்க வேண்டும். ஆனால் மூன்றாம் தர அரசியல்வாதி போல் வைகோ நடந்து கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அதிலும் ஒரு கட்சியின் தலைவர் செய்தியாளர்களை தாக்குமாறு தனது தொண்டர்களை நோக்கி பகிரங்கமாக மேடையிலேயே வெறியேற்றும் வகையில் பேசி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
இந்த சம்பவத்திற்கு உடனடியாக திரு.வைகோ பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் நியாயமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
செய்தியாளர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்படுவது புதிதல்ல. தொடர்ந்து வரும் இது போன்ற அடாவடி சம்பவங்களை தடுப்பதற்காக தான், தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுபோன்ற ஒரு சட்டப் பாதுகாப்பு இருக்கும்போது தான் இது போன்ற குண்டர்கள் தாக்குதலின் போது உரிய நீதியை பெற வாய்ப்பு அமையும் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.