ஜெயா தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பை தடுப்பது ஜனநாயக விரோதம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் செய்தி, வருமான வரித் துறை அதிகாரிகளின் பணிகளுக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமையாத நிலையில்….

வருமான வரித்துறை அலுவலகம்
வருமான வரித்துறை அலுவலகம்

ஜெயாடிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவை, இளவரசி மகன் விவேக் ஜெயராமனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்த நிலையில், இன்று காலை ஆறு மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விவாதம், பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட், லைவ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ’தேவைப்பட்டால் நியூஸ் கார்டு மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று 09.11.2017 வியாழன் காலை முதல் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஜெயா தொலைக்காட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நடைபெறும் வருமான வரி சோதனைகள் குறித்து ஜெயா ப்ளஸ் செய்தி சேனல் செய்தி ஒலிபரப்பி வருகிறது.

ஆனால் வருமான வரித் துறை சோதனை தொடர்பாக எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா செய்தி குழுவினரை மிரட்டி வருவதாக , அங்குள்ள ஜெயா தொலைக்காட்சி செய்தி குழுவினர் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது ஊடகங்களின் அடிப்படை கடமை. ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் செய்தி, வருமான வரித் துறை அதிகாரிகளின் பணிகளுக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமையாத நிலையில், வருமான வரி சோதனை தொடர்பாக செய்தி வெளியிடக் கூடாது என்று மிரட்டுவதை, பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செயலாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.

இந்த மிரட்டல் போக்கையும் , கருத்து சுதந்திரத்துக்கு எதிரான ஏதேச்சதிகார போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai press club condemns it officers for objecting telecast of jaya tv live updates

Next Story
வருமான வரி சோதனைக்கு நடுவில் “கோ பூஜை” … ‘தாமரை’ வைத்து டிடிவி தினகரன் வழிபட்டது ஏன்? வீடியோAIADMK, It Raid in Chennai, Jaya TV Office, IT Raid in Kodanadu Estate, Thanjavur, Viduthalai Chiruthaigal Katchi, BJP,Pooja
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express