சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை பிரஸ் கிளப்) சார்பில் இன்று (ஜனவரி 4) விடுக்கப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று (04-01-2023) புதன்கிழமை காலை சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. புதியதலைமுறை செய்தியாளர் இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசியலில் வளர்ந்து வரும் அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil