பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்

திண்டுக்கல் அருகே பொட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் நிருபர் ஷாலினி மறைவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஷாலினி, நேற்று திண்டுக்கல் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அமைச்சர் ஜெயகுமார், பால் முகவர் சங்கம் மற்றும் பத்திரிக்கைத் துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

“திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள பள்ளப்பட்டியில் மாலைமுரசு அலுவலகத்தில் பணிபுரியும் தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்ற, மாலைமுரசு தொலைக்காட்சி நிருபர் ஷாலினி மற்றும் அலுவலக நண்பர்கள் ராம்குமார் , சதீஷ், கோகுல் , பிரபுராஜ் ஆகியோர் இன்று (15-07-2018 ) ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய போது மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் , அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சகோதரி ஷாலினி உயிர் இழந்தார்.

காயமடைந்த மற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சகோதரி ஷாலினியின் மறைவுச் செய்தி பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினியின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது துயரத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் பகிர்ந்து கொள்கிறது.” என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இணைச் செயலாளர் பாரதி தமிழன் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close