/indian-express-tamil/media/media_files/2025/02/26/0KOFplKNntCDn77Rt7gz.jpg)
த.வெ.க இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவின் போது பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் (பிப் 26) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த சூழலில் நிகழ்ச்சிக்கான பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அதில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, விழா அரங்கத்திற்குள் செல்வதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, பத்திரிகையாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் தள்ளுமுள்ளு நிலவியது.
இதில், பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, த.வெ.க தலைவர் விஜய், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "தமிழக வெற்றிக் கழகத்தின், இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி. பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை பாதுகாக்கும் த.வெ.க நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க மன்றம் உறுதுணையாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
. @TVKVijayHQ இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி. பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை பாதுகாக்கும் தவெக நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் pic.twitter.com/7MXH92n0ej
— Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) February 26, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.