சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காலவை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 47-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
தி.மு.க அரசில் மின்சாரத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை ஜூன் 13, 2023-ல் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டைக் கடந்த நிலையில், தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிப்பதால் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். அல்லி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்படுவதால் வழக்கு விசாரணை தாமதமாகிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை (ஜூலை 16 ) நேரில் அஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜி அவர், புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 47-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“