Chennai private bank robbery new updates: சென்னை தனியார் வங்கியில் கொள்ளை நடந்த சம்பவத்தில், போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு இன்று பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப்படுத்தி வங்கியில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
இந்தநிலையில், வங்கி ஊழியர் ஒருவரே, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வங்கி கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனிடையே கொள்ளை சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியில் தங்கள் நகை, பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil