சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் இந்தியில் கவிதை சொல்ல திணறியதால், அந்த மாணவனை ஆசிரியை ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனை பத்மலட்சுமி என்ற ஆசிரியர் கற்பிக்கிறார். இந்நிலையில், மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவனுக்கு இந்தி கற்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மாணவனை இந்தியில் கவிதை கூறுமாறு ஆசிரியை பத்மலட்சிமி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியில் கவிதை கூற மாணவன் திணறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை பத்மலட்சுமி, மாணவனை கடுமையாக தாக்கிவிட்டு, பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இச்சம்பவம், தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்தித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் பள்ளியில் இந்தி பேசுவதற்கு திணறிய மாணவன், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.