சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்ததை அடுத்து, இதுபற்றிய விவாதங்கள் அப்போதைய சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.
அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுதியது. இந்நிலையில், புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவலின் படி, 10 வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதில் கணேசன் என்ற 52 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்ததாகவும், கணேசன் பத்தாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு லிஃப்டின் செல்லும்போது லிஃப்ட் அறுந்து மேலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பேசின் பிரிட்ஜ் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முறையான பராமரிப்பு இல்லாததே இதுபோன்று விபத்துக்கள் நடக்க காரணம் என அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“