புழல் பெண்கள் சிறையில் இருந்து தப்பியோடிய கைதி ஜெயந்தி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, செம்மஞ்சேரி பகுதியில் குடிபெயர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயந்தி, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கு தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ஜெயந்திக்கு கடந்த 13 ஆம் தேதி தூய்மைப் பணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயந்தி, கைதிகளை பொதுமக்கள் பார்வையிடும் பகுதியில் தூய்மைப் பணியை செய்துள்ளார். அப்போது, அந்த அறை வழியாக மதியம் 3 மணிக்கு ஜெயந்தி, தப்பியோடி உள்ளார். ஜெயந்தி தப்பியோடியது உடனடியாக தெரியவில்லை.
வழக்கம் போல் அன்று மாலை கைதிகளை சிறை காவலர்கள் எண்ணியபோது, ஜெயந்தி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, சிறை அதிகாரிகள், சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்கள் மனு கொடுத்து கைதிகளை பார்க்கும் அறை வழியாக ஜெயந்தி தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து புழல் போலீசார் தப்பியோடிய ஜெயந்தியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில், சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை சிறைத் துறை டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
தப்பியோடியை ஜெயந்தியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் வைத்து புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் ஜெயந்தியை கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“