Rain in Chennai: கடும் வெப்பத்தில் பெரும்பாலான நாட்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெயிலை அனுபவித்து வந்த சென்னை மக்களை மகிழ்வித்திருக்கிறது தற்போதைய மழை!
வருடம் தொடங்கி 6 மாதம் முடியும் நிலையில், இந்த வருடத்தின் முதல் மழை இது. அக்னி நட்சத்திரம் மே மாதத்தில் தொடங்கி முடிவடைந்திருந்தாலும், ஜனவரி முதலே சென்னையில் வெயில் வாட்டி எடுத்தது. கத்தரி வெயில் முடிந்துவிட்டாலும், கடும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை சிரமங்களுக்கு ஆளாக்கியது.
இதன் தொடர்ச்சியாக மிக மோசமான நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் சென்னையை சூழ்ந்துக் கொண்டது. இதனால் பல உணவகங்கள், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டன. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
வெப்பம் குறையவும், தண்ணீர் தேவை பூர்த்தியாகவும் மழையை மலைபோல் நம்பியிருந்தார்கள் சென்னைவாசிகள். அவர்களின் எதிர்பார்ப்பை தற்போது பூர்த்தி செய்திருக்கிறது மழை! இன்று மதியம் 1 மணிக்கு மேல் வானிலை மாற ஆரம்பித்து 2 மணியளவில் குளு குளு நகரமானது சென்னை.
பின்னர் சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர் சாலை, கோவிலம்பாக்கம், வேளச்சேரி, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, போரூர், தரமணி, குன்றத்தூர், திருப்போரூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
பல நாட்கள் காத்திருந்தது நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், மழை சம்பந்தமான வீடியோக்களையும், படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மக்கள். இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் செய்தியும் மக்களின் காதுகளில் தேன் பாய்ச்சியிருக்கிறது. முக்கியமாக இந்த மழை மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும் என்பதும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
196 நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால், சென்னை மக்களின் உடலும் மனதும் குளிர்ந்தது!