Advertisment

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர்; மீட்பு பணிகள் துரிதம்

Chennai rain heavy water logging areas and rescue activities: கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம்; மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய தமிழக அரசு

author-image
WebDesk
New Update
Chennai rains, TN rains, Chennai flood, flood alert

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில், வீடுகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், மேலும் மிக கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மட்டும் 480.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட 26 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.  தொடர் மழை காரணமாக சாலை, வீடுகள், தாழ்வான பகுதிகள் என பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது.

சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக, பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவான்மியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, யானைகவுனி, பிராட்வே, மாதவரம், திருவொற்றியூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, பெரம்பூர், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கியுள்ளது.

தேனாம்பேட்டை குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, விஜயராகவா சாலை, கே.கே.நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், வியாசர்பாடி, கொரட்டூர் டிடிபி காலனி, கள்ளிக்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

கூவம், ஓட்டேரி கால்வாய், மணப்பாக்கம், கால்வாய், பக்கிங்காம் கால்வாய் நிரம்பி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் வடசென்னை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதேபோல் கொளத்தூர் பகுதிகளில் வெள்ள நீர் இடுப்பளவிற்கு சூழ்ந்துள்ளது.

அதே போன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, வால்டாக்ஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, வேளச்சேரி மெயின்ரோடு, எண்ணூர்-மணலி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்தனர்.

இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகள், முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் போர்கால அடிப்படையில் ஈடுபட்டனர். அதே போன்று நீர்வளத்துறை சார்பில் அடையாறு, பக்கிங்காம், கூவம், கொசஸ்தலையாறிலும், மணப்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். முகத்துவார பகுதிகளில் மழை நீர் கடலில் சென்று கலக்கும் அளவுக்கு 24 மணி நேரமும் ஜேசிபி உதவியுடன் மண் படிமங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ஈவிஆர் சாலையில் உள்ள கங்கு ரெட்டி சுரங்கபாதை ஆகிய 6 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த பகுதி வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து சுரங்கபாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை நீர் தேங்குவதை தடுக்கவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment