சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் மின்சார ரயில் சேவையும் வழக்கம்போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இருப்பினும் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை காரணமாக தமிழக அரசு விடுமுறையை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (08.11.2021), ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின் படி காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை இரு மார்க்கத்திலும் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், தொலைதூர ரயில் சேவைகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. காலையில் சென்ட்ரலில் இருந்து புறப்படும் சில நிஜாமுதீன் ரயில் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil