Chennai Rain : சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் மழையால் நகர வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று மாலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, மந்தைவெளி, பட்டினம்பாக்கம், புரசைவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த மழை இன்று காலையும் தொடர்ந்தது.
சென்னை கிழக்குக் கடற்கரை மற்றும் பழைய மகாபலிபுரம் பகுதிகளில் நண்பகலில் நேரத்தில் திடீரென கனமழை கொட்டத் தொடங்கியது. இதனால் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், திடீர் மழையை ரசித்தனர். அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை மற்றும் போரூர் ஆகிய பகுதிகளிலும் அரைமணி நேரம் மழை வெளுத்துவாங்கியது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”