சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்த சுமார் 100 பயணிகள் விமான நிலைய ஓய்வறையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் 15 விமானங்களின் வருகையும், 16 விமானங்கள் புறப்படுவதும் தாமதமானது.
விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து ஒன்பது மணி நேரம் வரை தாமதமாக வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தமானுக்கு செல்லும் ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டது, மேலும் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகாலை 4 மணியளவில் பெங்களூருவில் தரையிறங்கி ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஆஷா, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறுகையில், ’நான் இரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தேன். நான் ரயிலில் சென்றிருந்தால் கூட வீட்டிற்கு முன்பே சென்றிருக்க முடியும்.
காத்திருப்பை விட, தாமதம் குறித்து விமான நிறுவனத்திடம் இருந்து தொடர்பு இல்லாதது தான் கவலை அளித்தது. பல்வேறு காரணங்களால் மக்கள் விமானத்தை முன்பதிவு செய்திருப்பார்கள். விமானம் எப்பொழுது புறப்படும் என்று தெளிவாக சொல்லாதது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியது. ஊழியர்களுடன் மிகுந்த வாக்குவாதத்திற்குப் பிறகுதான் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. விமான ஊழியர்களுக்கும் தாமதம் பற்றி எந்த யோசனையும் இல்லை. மழை நின்றதும் தாமதமான மற்ற விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கியதால் மழை மட்டுமே காரணம் என்று நாங்கள் நம்பவில்லை’ என்றார்.
கவுஹாத்தியில் இருந்து சென்னை வழியாக பெங்களூருவுக்கு இரவு 9.25 மணிக்கு வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சென்னையில் ஓடுபாதை சரியாகத் தெரியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணியாளர்களின் அனுமதிக்கப்பட்ட விமான நேரம் முடிந்துவிட்டதால், அடுத்த குழுவினர் வரும் வரை பெங்களூரில் இருந்து விமானம் புறப்பட முடியவில்லை. பெங்களூரு புறப்பாடு வெள்ளிக்கிழமை இரவு 10.05 முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை தாமதமானது.
துபாய் மற்றும் பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு சர்வதேச விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. துபாய் செல்லும் விமானமும் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் தாமதமானது.
சனிக்கிழமை அதிகாலை அந்தமானுக்கு 138 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக அந்தமானில் தரையிறங்க முடியாமல் காலை 11 மணியளவில் சென்னை திரும்பியது.
விமானம் ரத்து செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது, ஆனால் பயணிகள், தங்குவதற்கு வசதியும் அல்லது உணவு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.