சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானிகள், விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. அதேபோல் பயணிகளின் உடைமைகளை விமானங்களில் ஏற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உள்பட 22 விமானங்கள் புறப்படுவதில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர், இலங்கை, குவைத், பஹ்ரைன், துபாய், சார்ஜா, தோஹா, அமீபா, அபுதாபி, மஸ்கட், லண்டன் உள்ளிட்ட 12 சர்வதேச விமானங்களும், அதேபோல் திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
மேலும், விமான நிலையத்தில் பயணிகள் வரத்தும் குறைவாக உள்ளது.
இன்று அதிகாலை தூத்துக்குடி செல்லக்கூடிய விமானமும், தூத்துக்குடியில் இருந்து வரக்கூடிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில விமானங்கள் ரத்து செய்ய நேரிடலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“