Chennai Rains, Tamil Nadu Weatherman Update: 196 நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று(ஜூன்.20) மழை பெய்திருக்கிறது. 'மழை பெய்யுது' , 'குடை இருக்கா?' , 'ரெயின் கோட் இருக்கா?' போன்ற வார்த்தைகளை பல மாதங்களுக்குப் பிறகு, இப்போது தான் சென்னைவாசிகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், இம்மழை தொடருமா? என்ற ஐயம் அடுத்த கணமே தொற்றிக் கொள்ள, தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவு அந்த கவலையையும் போக்கியுள்ளது.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இன்றிலிருந்து அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகையால், நாளையில் இருந்து 40+ செல்சியஸ் வெப்பத்திற்கு நாம் விடை கொடுக்கலாம். நான் முன்பே சொன்னது போல், மழை பரவாது. எனவே, வட சென்னையில் மழையை எதிர்பார்க்க வேண்டாம். தென் சென்னையில் மழை இருக்கும். நகரத்தின் ஒவ்வொரு பகுதியும், குறைந்தது 2-3 மூன்று நாட்களுக்கு மழை பெறும்.
சென்னை மட்டுமல்ல, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கண்டிப்பாக மழை இருக்கும். நீலகிரி மற்றும் வால்பாறையிலும் மழை பெய்யும்.
நாளையிலிருந்து வெப்பம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிலிருந்து கூட, 40+ செல்சியல் வெப்பநிலைக்கு நாம் குட்பை சொல்லலாம். குறைந்த காற்றழுத்தத்தால் நமக்கு நேரடியாக மழை கிடைக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நமது மழைக்கு வெப்பம் மிக முக்கியம்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.